தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மக்கள் திலகம் 16 படங்களில் இரட்டை வேடங்களை ஏற்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து முதலில் வெளியான படம் நாடோடி மன்னன். 1958ல் வெளியான இந்தப்படத்தில் மன்னர் மார்த்தாண்டன் மற்றும் புரட்சியாளர் வீராங்கன் ஆகிய இரண்டு வேடங்களில் புரட்சித் தலைவர் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கத்தாலும், மக்களின் ரசனையை முழுவதுமாக அறிந்ததாலும் பின்னர் 15 படங்களில் தொடர்ந்து இரட்டை வேடங்களை ஏற்றார்.
1960ஆம் ஆண்டில் ராஜா தேசிங்கு படத்தில் ராஜா தேசிங்கு மற்றும் தாவூத் கான் ஆகிய இரண்டு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார். விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் திரைப்படமான கலை அரசி திரைப்படம் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1963ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் பூமியில் வாழும் மோகனாகவும், வேற்று கிரகத்தில் வாழும் கோமாளியாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாத்திரம் ஏற்றார். 1964ஆம் ஆண்டில் வெளியான ஆசைமுகம் திரைப்படத்தில் மனோகர், வஜ்ரவேலு ஆகிய கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வந்த எங்கள்வீட்டுப் பிள்ளை திரைப்படம் இரட்டை வேடப் படங்களின் இலக்கணமாகவே அமைந்தது. அதில் ராமு என்கிற ராமன், இளங்கோ என்கிற லட்சுமணன் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்.
1968ஆம் ஆண்டில் குடியிருந்த கோவில் படத்தில் ஆனந்த் மற்றும் பாபு என்கிற சேகர் ஆகிய இரண்டுவேடங்களில் புரட்சித்தலைவர் நடித்தார். 1969ஆம் ஆண்டில் வந்த அடிமைப் பெண் திரைப்படத்தில் வேங்கை மலை அரசனாகவும் இளவரசன் வேங்கையனாகவும் எம்.ஜி.ஆர். தோன்றினார்.
1970ஆம் ஆண்டில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன், ரகுநாத் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். 1971ஆம் ஆண்டில் வெளியான நீரும் நெருப்பும் படத்தில் இளவரசன் மணிவண்ணன், இளவரசன் கரிகாலன் ஆகிய இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்தார். எம்.ஜி.ஆரின் பெயருக்கு முன்னர் ‘பொன்மனச் செம்மல்’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்ட முதல் படம் நீரும் நெருப்பும் ஆகும். இந்தப் படத்தின் ஒரு கத்திச் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.ஆரே கத்தியைக் கொடுத்து உதவும் போது, அன்றைக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்த காட்சி திரையரங்குகள் காணாததாக இருந்தது.
1973ஆம் ஆண்டில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முருகன், ராஜு ஆகிய இரண்டு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் புரட்சித் தலைவர் தோன்றினார். அதே 1973ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு படமான பட்டிக்காட்டு பொன்னையா-வில் பொன்னையா மற்றும் முத்தையா ஆகிய இரு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார்.
1974ஆம் ஆண்டில் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும் குமார் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். அதே 1974ஆம் ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் படத்தில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் ஆகிய வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.
பின்னர் 1975ஆம் ஆண்டில் வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் படத்தில், பாடகர் சௌந்தரம், வியாபாரி ரஞ்சித் குமார் ஆகிய பாத்திரங்களை மக்கள் திலகம் ஏற்றார். 1975ஆம் ஆண்டில் வெளியான நாளை நமதே திரைப்படத்தில் சங்கர், விஜயகுமார் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தோன்றினார். இதில் இளவயதில் தொலைந்துபோன சகோதரர்கள், ஒருவரை ஒருவர் அடையாளம் காணப்பாடும் ‘அன்பு மலர்களே’ பாடல், இன்றும் தமிழக திரையுலகின் பெரிதும் விரும்பப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
1976ஆம் ஆண்டில் வெளியான ஊருக்கு உழைப்பவன் படத்தில் போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா ஆகிய பாத்திரங்களை பொன்மனச் செம்மல் ஏற்றார். இதுவே எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.
அரசியலில் ஒருபோதும் இரட்டை வேடம் போடாத பொன்மனச் செம்மல் அவர்கள், திரைத்துறையில் அதிக இரட்டை வேடங்களை ஏற்றது ஒரு இனிய வரலாற்று முரண்.
Discussion about this post