எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு முறைப்படி அரசாணை இயற்றப்பட்டு, உரிய துறைகளிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவை கட்டவோ, திறக்கவோ தடை இல்லை என நீதிமன்றம் அண்மையில் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான கடந்த ஜனவரி 17-ம் தேதியன்று நூற்றாண்டு விழா நினைவு வளைவு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு, முன்பே கட்டப்பட்ட சட்டப்பேரவை வைரவிழா வளைவு விதிமுறைகளைப் பின்பற்றி கட்டப்பட்டது எனத் தெரிவித்தார்.
சென்னையில், எம்.ஜி.ஆர். நினைவு வளைவு கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோரிடமிருந்து தடையில்லா சான்றிதழும், பெருநகர வளர்ச்சி குழுமம், கடலோர ஒழுங்கு மண்டல ஆணையம், பொது பணித்துறை என அனைத்து துறையின் அனுமதியும் முறையாக பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Discussion about this post