கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம், 120.2 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 25 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது, அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் உபரி நீர் போக்கி வழியாக, 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் அளவு 24.4 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
இதேபோல், கல்வராயன் மலை மற்றும் கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அணையின் நீர் வரத்தானது இரவு முதல் 2 ஆயிரம் கன அடி வீதம் இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல், மழையின் அளவு குறைந்துள்ளதால், அணைக்கு நீர் வரத்து 200 கன அடி வீதம் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.