இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக தண்ணீருக்குக் கீழே செல்லும் ரயில்பாதை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மலையைக் குடைந்தும், தரைக்கும் உள்ளேயும், பாலங்கள் மீதும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் நீருக்குள் செல்லும் ரயில்பாதை நம்நாட்டில் அமைக்கப்படவில்லை.
ஐரோப்பாவில் இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் ஆங்கிலக் கால்வாயின் கீழே, கடலில் ரயில்பாதை உள்ளது. ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளிலும் நீருக்குள் செல்லும் ரயில்பாதைகள் உள்ளன. ஆனால் உலகிலேயே அதிக பயணிகளைக் கொண்ட இந்திய ரயில்வேயால் இந்த சாதனை வெகுகாலமாக நிகழ்த்தப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு அங்கமாக, அதன் இரண்டாவது ரயில்பாதை புகழ்பெற்ற ஹூக்ளி ஆற்றை உள்ளே இறங்கிக் கடக்கும் விதமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
ஹூக்ளி ஆற்றுக்குக் கீழே 30 அடி ஆழத்தில் 520 மீட்டர் நீளத்திற்கு இந்தப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. நீர்க்கசிவைத் தடுக்க இந்த ரயில்வே பாதை 3 அடுக்குகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ள நிலையில், விரைவில் ஹூக்ளி ஆற்றின் கீழே மெட்ரோ ரயில் பாய்ந்து செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ரயில்வேயின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று பெருமிதமும் தெரிவித்து உள்ளார்.