மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.5 ஆயிரத்து 912 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும்தான் தான் அனுமதி அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து, இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட நீரின் அளவு, கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம், தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு விபரம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post