காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக தயாரித்து வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கடந்தாண்டு நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதிகளில், மேகேதாட்டுவில்அணைகட்டுவது தொடர்பான ஆய்வுக்கு, எதிர்ப்புதெரிவித்து, கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி தான் எழுதிய கடிதம் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் கர்நாடக அரசு அண்மையில் சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக கடந்தாண்டு நவம்பர் 30ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
அதேபோல், கர்நாடக அரசு அணைகட்டினால், தமிழக மக்களுக்கு நீரைப்பகிர்ந்து அளிப்பதில் பிரச்சனை ஏற்படலாம் என்றும், இதனால் தமிழக மக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விவகாரத்தில் தமிழக மக்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post