சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், கருப்பு கவுனி என்ற பாரம்பரிய நெல் ரகத்தை பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழ வகை செய்யும் மருத்துவ குணங்கள் கருப்பு கவுனி நெல் ரகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருமை நிறத்தில் கதிர் முற்றி கொத்து கொத்தாக ஆள் உயரம் வளர்ந்து, பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கின்றன கருப்புகவுனி நெல் ரகங்கள். தற்போது சாதாரணமாக விளைவிக்கப்படும் நெல் ரகங்களின் நெற்தாள்கள் மிகவும் சிறியதாக காணப்படும் நிலையில், ஆளுயரத்திற்கு வளருவதே கருப்பு கவுனி நெல் ரகத்தின் முதல் சிறப்பு என்கின்றனர், இந்த நெல்லை பயிரிடும் விவசாயிகள். மன்னர் ஆட்சி காலத்தில், அரச குடும்பத்தினர் மட்டுமே இந்த நெல் ரகங்களை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் புஜ பல பராக்கிரமசாலிகளாக எதிரிகளை வெல்லும் திறன் படைத்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறுகிறார் விவசாயி பெரியண்ணன்.
கருப்பு கவுனியுடன், தூயமல்லி, இழுப்பைபூ சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களையும் அவர் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்கிறார். புற்றுநோய், ரத்தக் குழாய் அடைப்பு, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கருப்பு கவுனி நெல்லுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. 5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் எனவும், ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் வரை விளைச்சல் எடுக்கலாம் எனவும் கூறுகின்றனர். பூச்சிகளை எதிர்த்து சிறப்பாக போராடும் தன்மை வாய்ந்த இந்தப் பயிர்களை, நடுவதில் இருந்து அறுவடை செய்யும் வரை பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதில்லை என்றும், இதுவே இதன் சிறப்பு எனவும் தெரிவிக்கின்றனர்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரின் ஊக்கத்தினால், பாரம்பரிய நெல்ரகங்களை ஆர்வத்துடன் பயிரிட்டு வருவதாக தெரிவிக்கும் பெரியண்ணன், மற்ற விவசாயிகளிடமும் பாரம்பரிய நெல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக குறிப்பிடுகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை மீண்டும் பிரபலமாக்க வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post