சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், மருத்துவக் கண்காட்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த கண்காட்சி மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்வதின் அவசியத்தை உணர்த்துகிறது.
காசநோய், இரத்த சோகை, புற்றுநோய், தைராய்டு பிரச்சனை, எலும்பு சார்ந்த நோய்கள், ஹெச்.ஐ.வி. பாதிப்பு, வயது சார்ந்த கோளாறுகள் என எண்ணற்ற நோய்களால் நாம் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். இதுபோன்ற பல்வேறு நோய்கள் நம்மை எவ்வாறு தாக்கும், அவற்றில் இருந்து நாம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை மருத்துவ கல்லூரி சார்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியின் நோய்க்குறியியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சியில் 250 மாணவர்கள் சேர்ந்து 25 அரங்குகள் அமைத்து மனித உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு விளக்கமளித்து வருவதாக கூறுகின்றனர் கண்காட்சியை நடத்தும் மாணவர்கள். பெண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மார்பக புற்று நோய் என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது என்பதால் பெண்கள் தங்களது மார்பகங்களை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறனர். சந்தேகமிருப்பின் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம் என்கின்றனர் மருத்துவம் பயிலும் மாணவர்கள். தைராய்டு என்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் நாம் உண்ணும் உணவின் மூலமே சரி செய்துகொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவ மாணவர்கள். அது எந்த வகை தைராய்டு என்பதை பொறுத்து அதற்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துத் கொள்ளவும் அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக கூறுகிறார் சென்னை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஜெயந்தி. பொதுமக்கள் நோய் சார்ந்து கேட்கும் சந்தேகங்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் பதில் அளித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளில் இது தான் முதலாவது மருத்துவ கண்காட்சி என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை மருத்துவக் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாட்டில் மிகப்பெரிய மருத்துவ கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post