கனடாவில் தங்கியுள்ள ஹாரி – மேகன் குடும்பத்தை, சில இங்கிலாந்து ஊடகங்கள் மறைந்திருந்து புகைப்படம் எடுப்பதாக, ஹாரி குற்றம் சாட்டியுள்ளார். ஹாரி குற்றம் சாட்டக் காரணம் என்ன?
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தனர். இவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத்தும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, தற்போது இவர்கள் இருவரும் கனடாவில் தங்கள் புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளனர்.
ஹாரி-மேகனின் சுதந்திரமான வாழ்க்கைக்காக, அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன். ஹாரி தொடர்ந்து இளவரசராக இருக்கலாம். அவர்கள் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில், டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், வருங்காலங்களில், அரச நிகழ்வுகள், அரச குடும்பம் சார்ந்த பயணங்களில் கலந்துகொள்ள முடியாது என்று ராணி எலிசபெத் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹாரி அரச குடும்பத்திலிருந்து விலகி, வெளியே சென்ற பிறகும், இங்கிலாந்து ஊடகங்கள் அவரைப் பின் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஹாரியும், மேகனும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர். தற்போது, மேகன் தன் குழந்தை ஆர்ச்சியுடன் அங்குதான் வசித்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் இருந்த ஹாரி, தற்போது கனடா சென்றுள்ளார்.
இந்நிலையில், சொகுசு விடுதிக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில், மேகன் தன் குழந்தையுடன் நடைப்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதேபோல், ஹாரி விமானம் மூலம் கனடா வந்து இறங்கிய புகைப்படங்களையும் இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதனால் கோபமடைந்துள்ள ஹாரி, தங்களை பின்தொடரும் ஊடகங்கள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேகன் சென்ற பூங்காவில் இருக்கும் புதர்களில் மறைந்திருந்து, அவரைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதே போலதான் ஹாரியின் புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. சில ஊடகங்கள், ஹாரியின் வீட்டு வாசலில் மறைந்து காத்திருக்கிறார்கள். ஹாரி – மேகன் தம்பதியை புகைப்படம் எடுக்க பிரத்தியேகமான கேமாராக்களை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறானது. மேகன் மற்றும் ஹாரியின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது’ என்று ஹாரியின் வழக்கறிஞர்கள் இங்கிலாந்து ஊடகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஹாரியின் குடும்பம் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகும் பதற்றம் தொடர்கிறது.
Discussion about this post