கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரைச் சேர்ந்த குணசேகர் தனக்கு சொந்தமான லாரியினை, திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் நிறுத்திச் செல்வது வழக்கம். அதேபோன்று ஜனவரி 29ஆம் தேதி இரவு நிறுத்திச் சென்ற லாரியை மறுநாள் காலையில் எடுக்கச் சென்றபோது, லாரி மாயமாகியுள்ளது. இதுகுறித்து போலீசில் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் லாரியை திருடி ஒட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் லாரி குறித்து விசாரித்து வந்த நிலையில், குணசேகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், மயிலாடுதுறையில் இருந்து பேசுவதாகவும், குணசேகரின் லாரி தனது வீட்டை இடித்து நிற்பதாகவும், உரிய நஷ்ட ஈடு தந்துவிட்டு லாரியை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.
உஷாரான குணசேகர், லாரியை ஓட்டி வந்தவர்கள் குறித்து விசாரித்தபோது, அவர்களைப் பிடித்து கட்டி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக, தான் வந்து நஷ்டஈடு தருவதாகக் கூறிய குணசேகரன், திருக்கோவிலூர் போலீசாருக்கு லாரி கிடைத்தது தொடர்பான தகவலை தெரிவிக்க அவர்களும் சேர்ந்து மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர். அங்கு லாரியை மீட்டதுடன், லாரியை திருடி வந்து விபத்து ஏற்படுத்திய இருவரையும் பிடித்து விசாரித்தனர். மயிலாடுதுறையை சேர்ந்த சத்தி மற்றும் சங்கர் ஆகிய இருவரும் திருக்கோவிலூரில் திருடும் நோக்கத்தில் 5 நாட்களாக சுற்றி வந்தபோது, லாரியை இரவில் நிறுத்திச் செல்வதை கண்காணித்து லாரியை திருடி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் திருக்கோவிலூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.