மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ரசிகர்கள் இல்லாமல் நடத்த இருப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் “மாஸ்டர்”. விஜய் மட்டும் நடிக்கும் போதே அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். ஆனால், மாஸ்டர் திரைப்படத்தில் விஜயோடு முதன்முறையாக மக்கள் செல்வன் “விஜய் சேதுபதியும்” இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் அதீதப்படுத்தியுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் வகையில், படத்தயாரிப்பு நிறுவனமும் படத்தை பற்றிய எதாவது ஒரு செய்தியை வெளியிட்டு வந்தது. அந்த வகையில், சமீபத்தில் அனிருத் இசையில், விஜய் பாடி வெளியான “குட்டி ஸ்டோரி”பாடல் இணயத்தில் வைரலாகி ஹிட் அடித்தது.
இதனால், விஜய் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். விஜய் நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரும் எதிர்பாக்கும் ஒன்றாக சமீபகாலத்தில் மாறிவிட்டது. அவர் சொல்லும் குட்டிக்கதைகளை சமூக வலைதளத்தில் வைரலாக்கி, அவர் ரசிகரகள் சிலாகிப்பது வழக்கமான ஒன்றாகி போனது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கபோவதாக செய்தி வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரலையில் பார்க்கலாம் என்று படக்குழு அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Discussion about this post