தருமபுரம் ஆதீனத்தின் புதிய மடாதிபதி ஓலைச்சுவடியில் தங்க எழுத்தாணியால் கையெழுத்திட்டுப் பதவியேற்றுக்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுர ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதி சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் கடந்த 4ஆம் தேதி காலமானார். இதனையடுத்து இளையமடாதிபதியாக இருந்த மாசிலாமணி ஞானசம்பந்தர் 27ஆவது மடாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். ஆதீனத்தின் பாரம்பரிய மடாதிபதி ஒடுக்கத்தில் உள்ள ஞான பீடத்தில் அமர வைக்கப்பட்டார். அவருக்குத் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு திருஞானசம்பந்தம் தம்பிரான் ஞானபீடாரோகணம் செய்துவைத்தார். மகா தீபாராதனைக்குப் பின்னர் ஆதீனத்தின் மரபுப்படி ஓலைச்சுவடியில் தங்க எழுத்தாணி கொண்டு கையொப்பமிட்டு 27ஆவது மடாதிபதியாக மாசிலாமணி ஞானசம்பந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம், திருவாவடுதுறை கட்டளைத் தம்பிரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post