சென்னையின் பழைய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது பிராட்வே பகுதியில் அமைந்துள்ள மஸ்கான் சாவடி புறாச்சந்தை. செல்லபிராணிகளுக்கென்று உள்ள இந்த சந்தை பற்றிய சிறிய தொகுப்பினை தற்போது காணலாம்.
375 ஆண்டுகளை கடந்த சென்னை இன்று இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ நகரமாக மாறியிருக்கிறது. பல அசுர மாற்றங்களை சந்தித்தும், இன்றளவும் பழமை மாறாத சில அடையாளங்கள் சென்னைக்குள் இருக்கத்தான் செய்கின்றன. பிராட்வே மஸ்கான் சாவடியில் உள்ள புறாச்சந்தை அதில் ஒன்று.
பிராட்வேயின் மையத்தில் இருக்கும் இரண்டு பிரதான தெருக்களை இணைக்கும் ஒற்றைச் சாலை தான் மஸ்கான் சாவடி. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4 மணி தொடங்கி 12 மணிக்குள்ளாக பல ஆயிரம் பேர் இந்த தெருவில் கூடுகிறார்கள். கைகளிலும், பைகளிலும் புறாக்களை சுமந்து கொண்டு சுற்றுகிறார்கள். பந்தயங்களுக்கென்றே பழக்கப்பட்ட புறாக்கள், வகை வகையான வளர்ப்புப் பறவைகள், வண்ண வண்ண மீன்கள், விதவிதமான கோழிகள், முயல்கள், என எல்லாம் இங்கே கிடைக்கும். இங்கு 12 வயது சிறுவன் தொடங்கி 80 வயது முதியவர் வரை அத்தனை பேரின் கண்களிலும் தேடல்… ஆர்வம்…!
சென்னையில் பணியாற்றிய சில ஆங்கிலேயே அதிகாரிகள், புறா வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இந்த பகுதிக்கு வந்து, புறாக்களை பறக்க விட்டு பந்தயம் நடத்தியிருக்கிறார்கள். அதைக்கண்டு அப்பகுதியில் வசித்த மக்களும் புறாவுக்கு ரசிகர்கள் ஆகி விட்டார்கள். இன்று, வட சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது புறா வளர்ப்பும், பந்தயமும். சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தெல்லாம் புறா வாங்கவும் விற்கவும் ஏராளமானோர் இந்த சந்தைக்கு வருகிறார்கள்.
சாலையின் முகப்பில் கூண்டுகள் விற்கப்படுகின்றன. வளர்ப்புப் பறவைகள், புறாக்கள், முயல்களுக்கான கூண்டுகள் 300 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை வகைவகையாக கிடைக்கின்றன. அதையடுத்து நாய்கள்… நாய்க்குட்டிகள்… அதன் தொடர்ச்சியாக வளர்ப்புப் பறவைகள்.. வண்ண வண்ண மீன்கள்… வெள்ளை எலிகள் என்று செல்லப்பிராணிகளின் சொர்கபூமியாகவே இருக்கிறது மஸ்கான் சாவடி. ஆஃப்பிரிக்க பறவைகள், லவ் பேர்ட்ஸ் ஆகியவற்றை சுற்றி எப்போதும் ஒரு இளவட்டக் கூட்டம் மொய்க்கிறது. இதைக் கடந்து நடந்தால்… விதவிதமான புறாக்களை தோளிலும், கையிலும் வைத்துக் கொண்டு விற்கிறார்கள்.
ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த சந்தையை தேடிவரும் செல்லப்பிராணிப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
புறாக்களை வளர்ப்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட சந்தை என்பதால் புறா பந்தயக்காரர்களின் சங்கமமாகவும் இந்த சந்தை திகழ்கிறது.
பிராணி வளர்ப்புப் பிரியர்கள், பந்தயக்காரர்கள் மட்டுமல்ல, சிறுவர்களையும் கவர்ந்திழுக்கிறது இந்த சந்தை.
பிற நாட்களில் சப்தம் இல்லாமல் இருக்கும் இந்த மஸ்தான் சாவடி ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகளின் கீச்சொலிகளாலும் மனிதர்களின் பேரங்களாலும் களைகட்டி விடுகிறது.
Discussion about this post