குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், பாரத ரத்னா விருது பெறுவதே எனது கனவு என்று தெரிவித்தார்.
ஆண்டுத்தோறும் கிரிக்கெட், பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்குவார். கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் 141 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 16 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சோ்ந்த மேரி கோம், பத்ம விபூஷண் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா். இந்த விருதை பெறும் முதல் விளையாட்டு வீராங்கனை மேரிகோம் ஆவார்.
இந்நிலையில், பத்ம விபூஷண் குறித்து செய்தியாளர்களுக்கு மேரி கோம் பேட்டி அளித்துள்ளார். “நான் இந்தியராக இருப்பதில் பெருமைக் கொள்கிறேன். பத்ம விபூஷண் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன். இந்த விருதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். மேலும், நாட்டின் மிக உயரின் விருதான பாரத ரத்னா விருது பெருவதே எனது கனவு. முன்னாள், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருது பெறும் இரண்டாவது நபராக, என் பெயர் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், பெண் வீராங்கனைகளில், பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர் மேரி கோம் என்ற பெயரை சம்பாதிக்கவும் விரும்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதன் மூலம் பாரத ரத்னா விருது கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, இந்த குடியரசு தினத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் எனது பெயரை இந்த விருதுக்கு பரிந்துரைத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும், அதற்கு ஆதரவு தந்த பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
Discussion about this post