செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போல் இந்த மாதம் வானில் தென்படும். மாலை, சூரியன் மறைந்த பின்னர் மேற்கு வானில் இந்த அற்புத காட்சி புலப்படும். ஜூலை 13 அன்று இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.
மேலும், ஜூலை 12 அன்று ஒன்றையொன்று நெருங்கி வருவது போல வானில் காட்சி தரும். செவ்வாய் வெள்ளி கோல்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறைச்சந்திரன் தென்படும். அன்று மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுபோல கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியை தொலைநோக்கி போன்று எந்தவித கருவிகளும் இல்லாமல் நம்மால் வெறும் கண்ணால் காண முடியும். இதில் எந்தவித ஆபத்தும் இல்லை.
மேற்கு அடிவானம் தெளிவாக மறைப்பு ஏதும் இல்லாமல் தெரிய கூடிய ஒரு இடத்தை தேர்வு செய்து ஒவ்வொரு நாள் மாலையில் சூரியன் மறைந்த பின்னர் வானத்தை பார்த்தால், இரண்டு கோள்களும் அடுத்தடுத்த நாட்களில் ஒன்றை ஒன்று நெருங்குவதை தெளிவாக காணலாம்.
உண்மையில் இரண்டு கோள்களும் விண்வெளியில் ஒன்றை ஒன்று நெருங்காது பூமியிலிருந்து காணும்போது அவை ஒன்றை ஒன்று நெருங்குவது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுகிறது. எனினும், இது காண்பதற்கு அற்புத காட்சியாக இருக்கும். ஜூலை 13 வரை ஒன்றையொன்று நெருங்கி வரும் கோள்கள் அதன் பின்னர் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த வானக் காட்சியை உங்கள் பகுதியில் நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாக கண்டு, அதன் புகைப்படத்தை எடுத்து எங்களுக்கு அனுப்பவும் : ariviyalpalagi@gmail.com தேர்வாகும் படங்களை அறிவியல் பலகையின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடுவோம்.
Discussion about this post