ஒரு கைபேசியில், அதன் முன்பக்க டிஸ்ப்ளேவை போல 180 சதவிகிதம் பெரிய டிஸ்ப்ளே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டிஸ்ப்ளேயுடன், 108 மெகா பிக்ஸெல் கேமரா, 12 ஜி.பி ரேம் ஆகியவற்றுடன், சந்தைகளைக் கலக்கி வரும் Mi Mix Alpha கைபேசி.
கனவுகளில் இருந்து தயாரித்த கைபேசியைப் போல இருக்கின்றது ஷாவ்மி நிறுவனத்தின் எம்.ஐ மிக்ஸ் ஆல்ஃபா கைபேசி. இதன் மொத்தப் பரப்பில் 180 சதவிகிதம் வெறும் டிஸ்பிளே மட்டும்தான். அதாவது முன்புறம் முழுவதும், இரண்டு பக்கவாட்டுப் பகுதிகள், பின்புறத்தில் பெரும் பகுதி ஆகியவை இணைந்து ஒரே டிஸ்ப்ளே பகுதியாக உள்ளன. இந்த டிஸ்பிளே பகுதியின் மொத்த அளவு 7 புள்ளி 92 இன்ச் ஆகும். இதற்காக மடங்கும் டிஸ்பிளேவை உருவாக்க ‘Flexible O L E D’ – என்ற நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 20 சதவீத இடத்தில், ஒரு பட்டையில் 3 கேமராக்கள் உள்ளன. இதில் பிரதான கேமரா 108 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதன் மூலம் எடுக்கப்படும் ஒரு புகைப்படம், 40 மெகா பைட் அளவுக்கு தரமானதாக இருக்கும். இரண்டாவதாக 20 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. மூன்றாவதாக 12 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட Depth சென்சார் கேமரா உள்ளது. கைபேசியின் ஆண்டெனா உள்ளிட்ட பகுதிகளும் இந்தப் பட்டையில்தான் உள்ளன.
12 ஜிபி ராம், 512 ஜிபி சேமிப்பு, 5 G தொழில்நுட்பம் என்று மிரட்டும் மிக்ஸ் ஆல்ஃபா கைபேசியில், எந்த பொத்தான்களும் கிடையாது, அனைத்தையும் டச் ஸ்கிரீன் மூலம்தான் இயக்க வேண்டும்.
ஷாவ்மி நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள், இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்தக் கைபேசியை உருவாக்கி உள்ளனர். ‘108 மெகா பிக்ஸெல் கேமராவோடு விரைவில் ஒரு கைபேசி வருகிறது’ – என்று மட்டும் இதற்கு முன்பு சொல்லி வந்த இந்நிறுவனம், அந்தக் கைபேசியின் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மிக்ஸ் ஆல்ஃபா கைபேசி, சந்தையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சீனாவின் சந்தையில், மிக்ஸ் ஆல்ஃபா கைபேசிகள், இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. உடனே இவை அதிக அளவில் சந்தைக்கு வராது என்றே தெரிகின்றது. இவற்றின் உற்பத்தி அதிகரித்து, விலையும் குறையும் போது, நவீன உலகின் சூப்பர் ஃபோனான மிக்ஸ் ஆல்பா, அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெறவே அதிக சாத்தியங்கள் உள்ளன.
Discussion about this post