மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை பற்றியும் அவருடைய சொத்து விவரங்களை பற்றியும் தற்போது பார்க்கலாம். கருணாநிதியின் பேரனும், முரசொலி மாறனின் மகனுமான திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்பனை செய்தார். அதற்கு கைமாறாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டி.வி. குழுமத்திற்கு 743 கோடி ரூபாய், மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக பெற்றார் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
பின்னர் சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் பதில் சொல்லாததைக் காரணம் காட்டி வழக்கிலிருந்து தப்பித்து கொண்ட ஊழல்வாதி தான், தற்போதைய மத்திய சென்னையின் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன். அதுமட்டும் அல்லாது மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது, அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் 323 தொலைபேசி இணைப்புகளை தனது குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சிக் குழுமத்திற்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அதன்மூலம் சுமார் 400 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என சிபிஐ தொடர்ந்த வழக்கு இன்றளவும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தற்போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் இவர், தனக்கு 11 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும் வெறும் 59 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே அசையா சொத்து இருப்பதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தாக்கல் செய்திருந்த சொத்து விபரத்தில் 10 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளதாக அவர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. 3 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரிலும், 3 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு தனது மனைவி பெயரிலும், 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு தன் மகன் பெயரிலும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருக்குவளையில் உள்ள 59 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள நிலமே தனது அசையா சொத்து என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே தயாநிதிமாறன் மீது தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு சி.பி.ஐ. வசம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஊழல் வழக்குகளில் தொடர்புடைய தயாநிதி மாறனுக்கு மீண்டும் திமுக வேட்பாளராக வாய்ப்பு அளித்திருப்பது சென்னை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே திமுகவிற்கு இத்தொகுதியில் தோல்வியை ஏற்படுத்தும் காரணமாக அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Discussion about this post