கொள்ளை போன மரகத லிங்கம் குப்பை மேட்டில் கண்டெடுப்பு

திருவண்ணாமலை அருகே உள்ள மனோன்மணி அம்மன் கோயிலில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபூர்வ பச்சை மரகத லிங்கம் குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலம் ஜமீன் குடும்பத்தினரால் ஜமீன் வளாகத்தில் மலையின் மீது மனோன்மணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபூர்வ பச்சை மரகத லிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கொள்ளைபோனது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், பச்சையப்பன் ஜமீன் வளாகம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் கொள்ளை போன பச்சை மரகத லிங்கம் கிடைத்துள்ளது. மரகத லிங்கத்தை ஜமீன்தார் குடும்பத்தினரிடம் காண்பித்து இது காணாமல் போன மரகத லிங்கம் தானா? என்பதை உறுதிசெய்தனர். இந்த தகவலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மரகத லிங்கத்தை திருடியது யார், லிங்கத்தை குப்பை மேட்டில் வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version