பேஸ்புக்கில் பெண்ணிடம் நட்பாக பழகி காதல் வலை வீசி பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகளுக்கு பேஸ்புக் மூலம் ஒரு வாலிபர் பழக்கமானார். அப்போது அந்த பெண்ணின் தொடர்பு எண்ணை வாங்கிய வாலிபர் அடிக்கடி செல்போனில் பேசி காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
நாளடைவில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நான் உங்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருப்பேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் தனது தந்தையிடம் கூற மாதவன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் முகநூல் பதிவுகளை ஆய்வு செய்து அந்த மர்ம நபரை தேடி வந்தார். இறுதியில் அந்த நபர் கொடுங்கையூர் 121வது தெருவைச் சேர்ந்த சர்புதின் என்பவரின் மகன் நூரல் அசீம் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் அவரது செல்போனில் இது போன்று பல பெண்களிடம் முகநூலில் பதிவில் நட்பாக பழகி பின்னர் காதல் வலைவீசி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post