இன்னும் 15 நாட்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கபடும் என்று எதிர்பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இந்த போராட்டத்தை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் எதிர்கட்சிகளின் தர்ணாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி புறப்பட்டு செல்வதற்கு முன்பு கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு காலாவதியாகிவிட்டதாக விமர்சித்தார். மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வர போவதில்லை என மோடிக்கு தெரியும் என்று கூறிய அவர், ஒன்றுபட்ட இந்தியாவை தான் மக்கள் விரும்புவதாக தெரிவித்தார். இதனிடையே இன்னும் 15 நாட்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக மமதா பானர்ஜி கூறினார்.