இலங்கைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன் என, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலால் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அமைதியை நிலைநாட்டும் வகையில் அனைவரும் ஒரே கொடியின் கீழ் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் ஒன்று திரள வேண்டும் என்று சிறிசேனா வலியுறுத்தினார். இந்த துயரத்தை தடுக்கும் பொறுப்பை தட்டிக் கழித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்து, அமைதியான இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்று மைத்ரிபால சிறிசேனா நம்பிக்கை தெரிவித்தார்.