மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் – 10 நாட்களில் 56 மரணங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலுக்கு 216 பேர் பலியாகி உள்ளனர். இதில் 160 பேர் கடந்த மாதம் மட்டும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நாசிக்கில் 69 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புனேயில் 41 பேரும், பிம்பிரி சிஞ்ச்வாட்டில் 32 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 56 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்து உள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் 51 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.பொதுமக்கள், காய்ச்சல் முற்றிய பிறகு வருவது தான் உயிரிழப்பு அதிகம் ஏற்பட காரணமாகும்.

பன்றிக்காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியதாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களும் அதனால் பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு 100% இருக்கிறது. இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்த வைரஸ் பரவும் என்பதால் எப்போதும் சுத்தமாக இருப்பதே காத்துக்கொள்வதற்கான ஒரே வழியாகும்.

சாதாரண காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு போன்றவைதான் இதற்கும் அறிகுறியாக இருப்பதால் மக்கள் அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். பின்னாளில் அதுவே உயிரிழப்பிற்கும் காரணமாகி விடுகிறது. எனவே காய்ச்சல் வந்துவிட்டால் பரிசோதனை செய்து விடுவது நல்லதாகும்.

 

Exit mobile version