ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் விழாக்கள் விமரிசையாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான கோவிலாக இருப்பது காளஹஸ்தி கோவிலாகும். வருகிற பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் விமரிசையாக நடைபெற உள்ளன.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்வினையொட்டி காளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கியமாக கோவிலின் நந்திச் சிலையானது வண்ணம் தீட்டப்பட்டு அற்புதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவில், பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு நந்தி வாகன சேவை மற்றும் இரவு லிங்கோத்பவ தரிசனம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 19ஆம் தேதி காலையில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 20ஆம் தேதி இரவு சிவன் – பார்வதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. 22ல் சுவாமி கிரிவலம், 23ல் கொடியிறக்கம், 24ஆம் தேதியில் பூப்பல்லக்கு சேவை மற்றும் 25ஆம் தேதியில் ஏகாந்த சேவை ஆகியவை நடைபெற உள்ளது. காளஹஸ்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ள இத்தருணத்தில் அலங்கார வளைவுகள் மற்றும் வீதி முழுக்க தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. ராஜ கோபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் முழுவதும் வண்ணக்கோலங்களால் காட்சியளிக்கின்றன. மேலும் சுவர்ண முகி நதியில் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post