இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமித்தது செல்லும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அங்கன்வாடி மையங்களில் நியமித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நடத்த, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் 5 ஆயிரத்து 934 ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரத்து 979 ஆசிரியர்களையும், அங்கன்வாடி மையங்களில் நியமித்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு, இது தொடர்பான தமிழக அரசின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

மேலும் மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் ஆசிரியர்கள், மாணவர் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து வழக்கு தொடர்வது ஏற்புடையதல்ல எனவும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version