MRS கேலக்சி ஆஸ்திரேலியா என்பது நம் ஊர்களில் நடைபெறும் இந்திய அழகி போட்டி போல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற அழகி போட்டி. இந்த போட்டியில் அங்கு வசிக்கும் தமிழக பெண் ஒருவர் தேசிய அளவில் தேர்வாகி இருக்கிறார். அங்கு ஒவ்வொரு வருடமும் MRS கேலக்சி ஆஸ்திரேலியா அழகி போட்டிகள் நடக்கும். அங்கு உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கன பெண்கள் இதில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் பெண்கள் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள். இந்த வருடம் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் இருந்து தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார் மதுரையை சேர்ந்த பெனிட்டா சக்தி.
மதுரையில் பிறந்து வளர்ந்த பெனிட்டா சக்தி, செயின்ட் மைக்கேல் பள்ளியில் படித்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 7 வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியா வந்த அவர், ஒரு தனியார் வங்கியில் 3 வருடங்களாக பணியாற்றினார். இந்த அழகிப் போட்டியில் தேசிய அளவில் தேர்வாகி இருப்பதால், தன்னுடைய வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு , இறுதி போட்டிக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவரிடம் நியூஸ் ஜெ தொலைக்காட்சி பிரத்யேகமாக பேட்டி எடுத்தது. அப்போது பெனிட்டா சக்தி பேசும் போது, “அழகிப்போட்டி என்பது வெறும் வெளிப்புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை, பெண்களின் தனித்திறமைகள், முடிவெடுக்கும் தன்மை, சிந்திக்கும் திறன்கள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை என பல்வேறு அளவுகோலை கொண்டு இந்த போட்டிக்கான வெற்றியாளரை தேர்வு செய்கிறார்கள். அந்த போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நான் தேசிய அளவில் தேர்வு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். பெண்களுக்கு எத்தனையோ திறமைகள் இருக்கிறது. ஆனால் பல பெண்களுக்கு தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வருவதில் பல்வேறு கட்ட சவால்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் கடந்து தான் பெண்கள் சாதிக்க வேண்டும். அப்படி சாதிக்கும் போது உலகம் நிச்சயம் உங்களை திரும்பி பார்க்கும் என்று குரலில் உற்சாகம் பொங்க கூறுகிறார் பெனிட்டா சக்தி. தற்போது திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் எனக்கு, என் கணவர் அனைத்து முயற்சிகளிலும் ஊக்கப்படுத்தி வருகிறார் என்றும், அதனால் இன்னும் தன்னால் பல சாதனைகளை செய்ய முடியும் என்று தன்னம்பிக்கையை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் போது கேட்கும் நமக்கும் தன்னம்பிக்கை ஏற்படுகிறது.வரும் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் MRS கேலக்சி ஆஸ்திரேலியா 2019 நடைபெற உள்ளது. அதிலும் வெற்றிபெற்று பட்டம் வெல்ல வாழ்த்துக்கள் பெனிட்டா சக்தி.
Discussion about this post