மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்தில் விண்ணை முட்டும் அளவிற்கு கோவிந்தா கோஷமிட்டனர்.
சித்திரைத் திருவிழாவையொட்டி சுந்தரராஜப்பெருமாளான கள்ளழகர், கடந்த 14ம் தேதி அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி அதிர்வேட்டு முழங்க கிளம்பினார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்றனர். தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியவர், இரவு முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கினார்.
பின்னர் அழகருக்கு நூபுரகங்கை தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை கள்ளழகர் அணிந்துகொண்டு, அதிகாலை 3 மணிக்குத் தங்கக் குதிரையில் ஏறி 5 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விசிறிகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கோவிந்தா முழக்கங்களுடன் கள்ளழகரை வரவேற்றனர்.
பின்பு, 6 மணியளவில் நாடு செழிக்கும் வகையில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்த அரிய காட்சியைப் பார்க்க அங்குத் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, பூக்களைத் தூவினர்.
பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கமிட்ட பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர்.
வைகை ஆற்றுக்கு வருவதற்கு முன்னதாகவே, ஆற்றுப்பாலம், ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் பகுதியான ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Discussion about this post