பி.எஸ்.என்.எல் சட்டவிரோத இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக ஊழல் முறைகேடு, குற்றச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர். வசந்தி முன்பு ஆஜராகினர்.
தொடர்ந்து, இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, மாறன் சகோதரர்களுக்கு எதிரான சாட்சிகள் விசாரணைக்காக, வழக்கை பிப்ரவரி 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது, குற்ற சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post