பீகார் மாநிலத்தில், மூளைக்காய்ச்சல் காரணமாக, 125-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். லிச்சி பழங்களை குழந்தைகள் சாப்பிட்டதே, இந்த உயிரிழப்புக்கு காரணமென மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்த ஓரு சிறப்புத்தொகுப்பைக் காணலாம்.
பீகார் மாநிலம், முஸாஃபர்பூர் மாவட்டத்தில், கடந்த 1 மாதத்தில் மட்டும், சுமார் 125-க்கும் மேற்பட்ட குழந்தைகள், மூளைக்காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது, அருகிலுள்ள கயா மாவட்டத்துக்கும் இந்நோய் பரவியுள்ளது. மரித்த குழந்தைகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில், லிச்சிப் பழத்தை குழந்தைகள் அதிகம் உண்கின்றனர். சர்க்கரை அளவு குறையும்போது, குழந்தைகள் லிச்சிப்பழத்தை உண்டால் மெத்திலீன் சைக்ளோ ப்ரொஃபைல் கிளைசீன் எனும் வேதிப்பொருளின் தாக்கத்தால், மூளை செயல்பாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
லிச்சிப்பழம், வட மாநிலங்களில் மிகப் பெருமளவில் கிடைக்கிறது. ஆண்டிற்கு 32 ஆயிரம் ஹெக்டேரில் லிச்சி பயிரிடப்படுவதாகவும், 3 லட்சம் மெட்ரிக் டன் பழங்கள் கிடைப்பதாகவும் தெரிகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளைத் தொடர்ந்து, பீகார், ஒடிஷா மாநிலங்களில், லிச்சிப் பழங்கள், உண்பதற்கு தகுதியானவையா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெப்பநிலை அதிகரிக்கும்போது, அப்பகுதியில் நோய் விரைவாகப் பரவுகிறது. தற்போது பீகாரில் வெப்பநிலை 42 டிகிரிக்கும் மேல் செல்வதே, இந்த தொடர் நோய் பரவலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பும், லிச்சிப்பழத்தில் இருக்கும் நச்சுத்தன்மையுமே, பீகார் குழந்தைகளின் தொடர் இறப்புக்கு காரணம் என தெரியவருகிறது.
அமிர்தத்தையே அளவுக்கு அதிமாக உண்டால் நஞ்சாகிவிடும். அப்படியிருக்க, நச்சுத்தன்மை உள்ள லிச்சி பழத்தை, அறவே தவிர்த்தால், உயிர் மிஞ்சும்.
Discussion about this post