கொரோனா 2 ஆம் அலைக்கு பின்னர் முதல்முறையாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்க உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். ஜூலை 19ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 40 மசோதாக்கள் மற்றும் 5 சட்டத்திருத்தங்கள் தாக்கலாக உள்ளன. இது இந்தக் கூட்டத்தொடரின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எப்படி திட்டமிடப்பட்டுள்ளது:
கொரோனாவுக்குப் பிறகு 19 நாட்கள் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுதான். நாள்தோறும் காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடர் மாலை 6 மணி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக வரும் 18ம் தேதி மக்களவை மாநிலங்களை குழு தலைவர்களுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தவுள்ளார்.
தடுப்பூசி கட்டாயம்:
கூட்டத்தொடரில் பங்குபெறும் எம்.பி.க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக
கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்தி கொண்டாலும் கூட பரிசோதனை கட்டாயம் இல்லை. ஆனால், தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளாத உறுப்பினர்களுக்கு RTPCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஊடகவியலாளர்கள், நாடாளுமன்றப் பணியாளர்கள் என எல்லோருக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.