அடுத்த ஆண்டு கொண்டாடப்படும் பொன்விழாவின்போதும், அ.தி.மு.க.வே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் என்ற மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளனர். அதில், உயிரினும் மேலாக மதித்து போற்றி பாதுகாத்து வரும் நம் இயக்கம் 48 ஆண்டு கால மக்கள் பணி நிறைவுற்று, 49-வது ஆண்டு தொடங்குகிறது என்றும், இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செழித்து ஓங்கி மக்கள் தொண்டாற்ற இருக்கும் ‘அ.தி.மு.க.’ என்னும் இந்த மாபெரும் பேரியக்கம், அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள், கழக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பேரறிஞர் அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் நிலைநாட்ட 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அ.இஅ..தி.மு.க-வை தொடங்கியதை நினைவுகூர்ந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நமக்கு அளித்த மாபெரும் கொடையாக இந்த இயக்கத்தை வழிநடத்த வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பொற்கால ஆட்சி நடத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான உழைப்பு, நிகரற்ற ஆற்றல், வியத்தகு அறிவு ஆகியவற்றால் அ.தி.மு.க. மகத்தான அரசியல் இயக்கமாகவும், மக்கள் பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆட்சியைத் தரத்தக்க இலக்கணம் அறிந்ததாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 29 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தி மக்களுக்கு தொண்டாற்றி வருவதோடு, இன்னும் பலநூறு ஆண்டுகள் தொண்டாற்ற இருக்கும் அ.தி.மு.க.வின் பணிகள் வரலாற்றுப் பொன்னேடுகளில் காலமெல்லாம் மின்னும் என அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை உணர்வாலும், திறன்மிகு உழைப்பாலும் அ.தி.மு.க-வையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க அரசையும் பொறுப்புணர்வோடு கட்டிக்காத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற பெருமிதம் நிலைபெற வேண்டும் என்பதே அ.தி.முக.வின் லட்சியங்கள் என்றும், அந்த லட்சியத்தை அடையவே அ.திமு.க. அரசு ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறது என்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது என்றும், மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போன்று, நாமும் தேர்தல் களத்தில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது, கழகமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் என்ற மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம் என்றும், அதற்காக நமது பணிகளை இன்றே தொடங்குவோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின்போது, அவர் தொடங்கிய கழகம் ஆட்சியில் இருக்கும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2015ஆம் ஆண்டு சூளுரைத்து, அதன்படி சாதித்துக் காட்டியதை நினைவு கூர்ந்துள்ளனர். அதைப் போலவே அதிமுக பொன்விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சியே தொடரும் என நாமும் சபதமேற்று செய்து முடிப்போம் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சூளுரைத்துள்ளனர்.
Discussion about this post