இந்தியாவின் இசைக் குயிலுக்கு இன்று 90வது பிறந்த நாள். யார் அந்த இசைக் குயில். அவரைப் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு….
தனது 13ஆவது வயதில் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்த லதா மங்கேஷ்கரின் குரலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள். அவரது குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்றும் கூறலாம். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படிப் பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.
இந்திய இசையுலகில் தனித்த அடையாளத்துடன் வலம் வரும் ”ஆஷா போஸ்லே” லதா மங்கேஷ்கரின் சகோதரி என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. 1942 ஆம் ஆண்டு “கிதி ஹசால்” திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிய இவர், இந்த 70 ஆண்டுகளில் பாடிய அனைத்துப் பாடல்களும் ஹிட். அவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் திரையரங்குகளில் மாதக் கணக்கில் ஓடின.
கிட்டத்தட்ட 20 மொழிகளில் பாடியுள்ள அவர், அந்தந்த மொழிகளுக்கே உரித்தான பிரத்யேகத் தொனியிலும், உச்சரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர். கமல்ஹாசன், அமலா நடிப்பில் உருவான ”வளையோசை கலகல கலவென” பாடல் இன்றளவும் தமிழ் ரசிகர்களால் போற்றப்படுவதற்கு லதா மங்கேஷ்வரின் குரல் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
1999ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கரை மாநிலங்களவை உறுப்பினராக்கி இந்திய அரசு அழகு பார்த்தது. முழு நேரப் பாடகியாக கலைத்துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை.வயதுதான் கூடிக்கொண்டே சென்றாலும் அவரின் குரல் என்னவோ இன்னமும் இனிமையாகத்தான் இருக்கிறது. அவரின் 90ஆவது பிறந்த நாளான இன்று நாமும் அவரை வாழ்த்துவோம்.
Discussion about this post