இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து கடந்த 15ம் தேதி லக்னோ வந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவையும் பின்பற்றாமல் சில நிகழ்ச்சிகளிலும், விருந்துகளிலும் கலந்து கொண்டுள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் லக்னோவில் கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா மற்றும் அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான துஷ்யந் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி துஷ்யந் சிங், இரண்டு நாள்களாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி பொது நிகழ்வில் கலந்துகொண்ட பாடகி கனிகா கபூர் மீது லக்னோ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post