ஐதராபாத்தின் கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரயில் மீது, புறநகர் ரயில் வேகமாக மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
கர்நூலில் இருந்து செகந்தராபாத்துக்குச் சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று காலை பத்தரை மணியளவில் ஐதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயில் எந்த நடைமேடைக்குச் செல்வது என்பதற்கான சிக்னல் கிடைக்காததால் நிலையத்துக்கு வெளியே காத்து நின்றது. அப்போது சிக்னல் கோளாறு காரணமாக எதிரே அதே தடத்தில் வேகமாக வந்த புறநகர் ரயில், விரைவு ரயிலின் இஞ்சின் மீது மோதியது. இந்த விபத்தில் புறநகர் ரயிலில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான புறநகர் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தைவிட்டு விலகிக் கீழே இறங்கின. இதனால் அந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post