குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும் என, மீண்டும் ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், கர்நாடக சட்டசபை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். இது தொடர்பாக அமளி ஏற்பட்டதால், அதனை காரணம் காட்டி, சபாநாயகர் பேரவையை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே தங்கினர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமையேபெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் இரண்டு முறை கடிதம் எழுதினார். ஆனால், கெடுவை கடந்து பேரவையில் விவாதம் நீடித்தது. இந்தநிலையில், கூட்டத்தை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ஒத்தி வைத்து உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், கர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.
Discussion about this post