உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமியை முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து பாரதிய ஜனதா கட்சியில் இருந்து செங்கார் நீக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் செங்காருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, காவல்துறை விசாரணையின்போது மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக நடைபெற்ற மற்றொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் செங்கார் உள்பட 4 பேர் குற்றவாளிகள் என டெல்லி கூடுதல் நீதிபதி தர்மேஷ் சர்மா தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான குல்தீப்சிங் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post