இந்திய அணி பேட்டிங் வரிசையில் வெவ்வேறு இடங்களில் விளையாடி முன்னேற்றம் அடைந்த ராகுல், ஐசிசி தரிவரிசை பட்டியலிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேனாக விளையாடி வரும் கே.எல்.ராகுல், ஒருசில போட்டிகளில் தொடக்க வீரராகவும் களமிறக்கப்படுகிறார். தற்போது, நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு, முக்கிய காரணமாக இருந்த ராகுல், தொடக்க வீரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 5 போட்டிகளில் 224 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், இருபது ஓவர் பேட்டிங் தரிவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 6வது இடத்தில் இருந்த கே.எல்.ராகுல் 2-வது இடத்திற்கு முன்னேறினார். இதேபோல், 13-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா, மூன்று இடங்கள் முன்னேறி, 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார். 70-வது இடத்தில் இருந்த மனிஷ் பாண்டே 58வது இடத்திற்கு முன்னேறினார். 100-வது இடத்திற்கு மேல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 55வது இடத்திற்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 9-வது இடத்திலேயே நீடிக்கிறார்.
இதேபோல், பந்து வீச்சில் பும்ரா, சாஹல், ஸ்ரதுல் தாகூர், சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மூவரும் தரிவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். 37-வது இடத்தில் இருந்த பும்ரா 11வது இடத்தை பிடித்துள்ளார். 40-வது இடத்தில் இருந்த யுவேந்திர சாஹல் 30-வது இடத்திற்கு முன்னேறினார். இதேபோல், ஸ்ரதுல் தாகூர் 91வது இடத்திலிருந்து 57வது இடத்திற்கும், சைனி 96வது இடத்திலிருந்து 71வது இடத்திற்கும், ஜடேஜா 76வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் 14வது இடத்தில் இருந்து 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
Discussion about this post