கேரளாவில் பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க தலைவராக பார்க்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மட்டனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சைலஜா டீச்சருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது, சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது
கேரளாவை மிரட்டிய நிபா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது உள்ளிட்ட காரணங்களால், கேரள மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர்ந்தது.
இதனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது, பினராயி விஜயனைப் போல, சைலஜா போட்டியிட்ட மட்டனூர் தொகுதியும் கேரளா முழுவதும் கவனம் பெற்றது.
இத்தேர்தலில், சைலஜா 60 ஆயிரத்து 963 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கேரளாவின் வருங்கால முதலமைச்சராக, சைலஜா ஊடகங்களால் காட்சிப்படுத்தப்பட்டார்.
மேலும், கேரளத்தின் செல்வாக்கு மிக்க முன்னாள் பெண் தலைவர்களான கெளரி அம்மா மற்றும் சுசிலா கோபாலனுக்கு இணையாக வர்ணிக்கப்பட்டார்.
இந்த சூழலில், புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படாததுடன், பினராயி விஜயனின் மருமகனான முகமது ரியாசுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
எனினும், கட்சியின் முடிவை தான் ஏற்பதாகத் தெரிவித்துள்ள சைலஜா, புதிதாக பதவியேற்க உள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Discussion about this post