கட்சி பிரமுகரை வெட்டி கொன்றவர்களை கருணையின்றி சுட்டுக் கொல்லுங்கள்: குமாரசாமி சர்ச்சை பேச்சு

தனது கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொன்றவர்களை சுட்டுக் கொல்லுமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஜேடிஎஸ் கட்சியின் பிரமுகர் பிரகாஷ் என்பவர் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த இவர் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த கொலை குறித்து அறிந்ததும், காவல்துறை அதிகாரி ஒருவரிடம் செல்போன் மூலம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரகாஷை தனக்கு நன்கு தெரியும் என்றும், நல்ல மனிதர் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அவரை ஏன் கொன்றார்கள் என்று தெரியவில்லை என்றும், கொலை செய்தவர்களை கருணையின்றி சுட்டுக் கொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இதுகுறித்து குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். தான் உணர்ச்சி வசப்பட்டே அவ்வாறு பேசியதாக அவர் கூறியுள்ளார்.

இரண்டு கொலைகளுக்கு காரணமான அவர்கள், ஜாமீனில் வெளிவந்து மற்றொரு நபரை கொன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை அவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் வருத்தத்துடன் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version