ஜனவரி 10, 2018ல் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரசானா கிராமத்தில் நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி வீடு திரும்பவில்லை.
ஜனவரி 17, 2018ல் காணாமல் போன சிறுமியின் உடல் வனப்பகுதியில் கைப்பற்றப்படுகிறது. அந்த சிறுமி தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டது உடர்கூறாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடெங்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கதுவா வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரசானா கிராமத் தலைவர் சஞ்சிராம் 2018 மார்ச் 20ல் சரணடைந்தார். அவரது மகன் விஷால், சஞ்சிராமின் நண்பர் ஆனந்த் தத்தா மற்றும் 3 காவல்துறையினர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் கைதான 8 பேரில் ஒருவர் சிறார் என்பதால், மற்ற 7 பேர் மீது மட்டும் வழக்கின் விசாரணை ஏப்ரல் 1, 2018ல் கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கியது. பின்னர் உச்சநீதிமன்ற தலையீட்டால் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்பட்டது.
ஓராண்டுக்கும் மேலாக, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடந்த இந்த வழக்கின் விசாரணை ஜூன் 3ல் முடிவடைந்த நிலையில் இன்று, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
Discussion about this post