பாகிஸ்தானில் காஷ்மீர் ஒருமைப்பாடு தினம் இன்று.
இந்திய வரைபடத்தின் எல்லையில்லாத அழகு, அதன் அழகிய தலைப்பகுதிதான். அந்த காஷ்மீர் பகுதிக்கு ஒருமுறையாவது போய்விட வேண்டும் என்று அவ்வளவு ஆசைப்பட்ட பால்ய காலம் இன்னும் மறக்கவில்லை.
ஆனால், நாம் வளர வளர நம்மோடு சேர்ந்து பிரச்சினைகளும் வளர்வது போல, காஷ்மீரின் பிரச்சினைகள் மெல்ல மெல்ல தெரிய வந்தன. காஷ்மீர் மீதிருந்த ஆசை போய் அனுதாபம் தான் வந்தது.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்துவிட்டோம். இந்தியா விடுதலை அடைந்த நாடு என்று பறைசாற்றிக்கொள்கிறோம். ஆனால் இப்போதும் காஷ்மீர் தன் விடுதலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் .இந்தியாவிற்கு இப்படி ஒரு அரணை விட்டுத்தர மனமில்லை. பாகிஸ்தானுக்கோ இவர்களின் விடுதலையில் விருப்பமில்லை. கிட்டத்தட்ட திபெத்துக்கும் சீனாவுக்கும் இருக்கிற உறவுதான் இப்போது இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும். அதென்ன சீனா-திபெத்?
அதாவது,காஷ்மீரைப் பொறுத்தவரை , தான் ஒரு சுதந்திரமான தனிநாடு. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் தன் நாட்டின் கட்டுக்குள் பெரும்பகுதி கொண்டிருக்கும் ஒரு அங்கம்.
ஆனால் ஒன்று தெரியுமா ? நம் அரசியலமைப்புச் சட்டத்தின் பலகூறுகள் இன்றும் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இடியாப்பச்சிக்கல்தான் இப்போதிருக்கும் எல்லா குழப்பங்களுக்கும் காரணம்.
இந்த நிர்வாகச்சிக்கல்கள் இப்படி இருக்க , போதாதகுறைக்கு இந்த எல்லைக் கலவரங்கள், பிரச்சினைகள் , தேடுதல்கள் , தீவிரவாத தாக்குதல்கள் வேறு.இப்படியாக எல்லைப்புறத்துக் கலவரங்களால் எல்லா நாளும் அவதிப்படும் அபலைக்காஷ்மீர்தான் நம் கண்களில் படுகிறது .
எங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் விட்டு விடுங்கள் என்கிற காஷ்மீரின் குரலை காதுகளில் வாங்கும் இரு நாடுகளும் ஒன்று லாகூரிலிருந்து கொண்டும் , மற்றொன்று டெல்லியில் இருந்துகொண்டும் இதற்கு முடிவு காண முடியாது என்பதை மட்டும் உணர்ந்துவிட்டால் போதுமானது.
சரி ஏதாவது ஒரு நாடு விட்டுக்கொடுக்கலாமே என்றால் , நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதால் இரு நாடுகளும் இதற்கு முன்வருவதில்லை,
இப்படி நாடுகளுக்குள் பிரச்சினை என்றால்தான் இருக்கிறதே சர்வதேச பஞ்சாயத்துத் திண்ணை. ஐநா சபை என்னும் அகில உலக ஆலமரம் . அது என்ன சொன்னது?
1948ம் ஆண்டு ஐநா சபை, காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு ஒன்று நடத்தி பாகிஸ்தானுடன் இணைய ஆசையா? இந்தியாவுடன் இணைய ஆசையா? என்று முடிவெடுத்து அதன்படி நடந்துகொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்தது.
பிறகென்ன? பிரச்சினை முடிந்தது. ஒட்டெடுப்பு முடிந்ததா? தேர்தலில் யார் வென்றது என்றால் , இன்றுவரை அந்த வாக்கெடுப்பு மட்டும் நடத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. விரைவில் நல்லது நடக்கட்டும்.
இதன் நினைவாக ஆண்டுதோறும் அனுசரித்து வரும் காஷ்மீர் ஒருமைப்பாடு தினம் இன்று. முதன்முதலில் 1990 ம் ஆண்டு காசி உசைன் அகமது அவர்களால் காஷ்மீர் தினம் என்று அனுசரிக்கத் தொடங்கப்பட்டு பின்நாளில் அதிபர் நவாஸ் ஷெரீஃப் அவர்களால் காஷ்மீர் ஒருமைப்பாடு தினம் என்று பெயர் மாற்றப்பட்டது.
இதில் ஒரு சிறுகுறிப்பு என்னவென்றால் , இந்த தினத்தை பாகிஸ்தானியர்களும் , காஷ்மீர் பூர்வகுடிகளும்தான் அனுசரிக்கின்றனர். இந்தியா இதை அனுசரிப்பதில்லை.
Discussion about this post