கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தனது மகள் ரக்ஷிதாவின் திருமண விழாவை 500 கோடி செலவில் ஆடம்பரமாக 9 நாட்கள் நடத்தி வருகிறார். கர்நாடகா மட்டும் அல்லாமல் நாடே ஆச்சரியப்பட்ட இந்த திருமண விழா பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
இருமணம் சேரும் திருமணம்… வாழ்வின் புதிய ஆரம்பமே திருமணம் தான். ஆனால், இந்த திருமண விழா பெங்களூருவை மட்டும் அல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆமாம், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுகிறது.
மகளின் திருமணத்தை நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, இதற்காக ஏறத்தாழ 500 கோடியை செலவிட்டு வருகிறார். திருமண விழாக் கொண்டாட்டங்கள் கடந்த பிப்ரவரி 27-ம் தேதியே தொடங்கி அமர்களமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அரண்மனை வளாகத்தில் ஒன்பது நாள் திருவிழா போல திருமண விழாவை நடத்தி வருகின்றனர். திருமண கொண்டாட்டத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை நடைபெறும் மணவிழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா என அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் திருமண அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 27 ஏக்கர் விழா அரங்குகள், வாகனங்களை நிறுத்த 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு ஏக்கர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மணப்பந்தலில் ஹம்பியில் அமைந்துள்ள வீரபக் ஷர் கோயில் வடிவம் உட்பட பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தனது மகளுக்கு மேக்கப் செய்ய, தீபிகா படுகோனின் மேக்கப் மேனை அழைத்துள்ளார் அமைச்சர் ஸ்ரீ ராமலு.
அரங்க அமைப்புக்காக மட்டும் சுமார் 300 பேர் மூன்று மாதங்களாக இரவு பகலாக வேலை செய்தனர். மாண்டியாவில் உள்ள மெலுகோட்டை கோயில் அமைந்துள்ளதைப் போல் மணமேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 200 மேடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு மேடையில் மலர்கள் அலங்கரிக்கப்படுகின்றன. வரவேற்புக்காக பல்லாரி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கம் என்று வண்ணமயாமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே பந்தியில் 7 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிட வசதி செய்யபட்டுள்ளது.
Discussion about this post