கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. குமாரசாமி அரசுக்கு போதிய பலம் இல்லை என்று கூறி, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது.
கர்நாடகாவில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது. கூட்டணிக்குள் கருத்து மோதல் இருப்பதால், ஆட்சிக் கவிழும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை குமாரசாமி மறுத்து வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்எல்ஏக்களுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இரண்டாவது முறையாக நோட்டீஸ் வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவிற்கு தாவ முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. வரும் 8ம் தேதி கர்நாடகாவின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இன்று ஆளுநர் வாஜூபாய் வாலா தன்னுடைய உரையை வாசிக்க துவங்கியபொழுது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தற்போதைய குமாரசாமி தலைமையிலான கூட்டணிக்கு போதிய பலம் இல்லை என்று தெரிவித்த அவர்கள் முழக்கம் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
Discussion about this post