காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக தகவல் அளித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகக் கூறினார்.
அதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரை கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில், பீகார் தேர்தலில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை, தமிழகத்தில் கடைபிடிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என சாகு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலமாக வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடப்படும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
Discussion about this post