கோவை சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64…
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை வதம்பசேரி பகுதியை சேர்ந்தவர் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், பாமாவிஜயா என்ற மகளும் உள்ளனர். மகள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆனநிலையில், கனகராஜும் அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் கனகராஜ், ஊராட்சித் தலைவர், கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
கடந்த 2011 முதல் 2016 வரை கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கனகராஜ், சுல்தான்பேட்டை ஊராட்சித் தலைவராக 2 முறையும், மாவட்ட கவுன்சிலராக ஒருமுறையும் பதவி வகித்தார்.
அரசியல் வட்டாரத்தில் அடிக்கடி பரப்பரப்பான கருத்துகளை தெரிவிக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவராக விளங்கிவந்த கனகராஜ், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, சுமார், 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக வாகை சூடினார்.
அனைத்து தரப்பு மக்களையும் உடனடியாக அணுகும் வகையில் எளிய சட்டமன்ற உறுப்பினராக திகழ்ந்ததால், மேற்கு மாவட்டங்களின் முக்கிய அரசியல் தலைவராக உருவெடுத்தார்.
சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜின் மறைவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post