டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணை 100 அடியை தாண்டியது. இதையடுத்து, கடந்த 13ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். திறக்கப்பட்ட இந்த நீர், கல்லணை வந்தடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், வெல்லமண்டி நடராஜன், சி. விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, அதிமுக மூத்த நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 500 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version