மனிதனின் தலைமுடியைவிடவும் மெல்லிய உலகின் மிகச் சிறிய வீடு ஒன்றை கனடா நாட்டின் பொறியாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.
கிறிஸ்துமஸ் விழாவுக்காக உருவாக்கப்படும் பிரட் வீடுகளுக்கு ‘ஜிஞ்சர் பிரட் வீடுகள்’ என்று பெயர். பார்க்க இவை வீடு போல இருந்தாலும், இவற்றை அப்படியே வெட்டி, உண்ண முடியும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது, கனடா நாட்டின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே உருவாக்கியுள்ள உலகின் மிகச் சிறிய ஜிஞ்சர் பிரட் வீடு. 6 மைக்ரான் அகலம், 10 மைக்ரான் நீளமுள்ள இந்த ஜிஞ்சர் பிரட் வீடு, உலகின் மிகச் சிறிய கட்டுமானமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வீடு மனிதனின் தலைமுடியை விடவும் சிறியது. இது தலைமுடி அளவே கனம் கொண்ட ஒரு பனி மனித உருவத்தின் தலைப் பகுதியில், நுண் கதிர்களைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. இதனை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் மட்டுமே காணமுடியும்.
இந்த வீடு, வெளித் தோற்றத்தில் மட்டுமின்றி, உட்கட்டமைப்பிலும் உண்மையான வீட்டையே ஒத்துள்ளது. இந்த வீட்டில், கதவுகள், ஜன்னல், நாற்காலிகள், புகைபோக்கி உள்ளிட்டவை இருப்பதோடு, கனடாவின் தேசியக் கொடியும் இதில் இடம் பெற்றுள்ளது.
இதனைக் கட்டிய பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக, பலகட்ட முயற்சிகளுக்கு பின்னரே, இந்த உலகின் மிகச் சிறிய வீட்டைக் கட்டியுள்ளார். இவரது இந்த வீடு குறித்த செய்தி, சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.
Discussion about this post