உலகிலேயே முதன் முறையாக கடலுக்கு அடியில் தனது ராணுவ அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது ஜோர்டான் நாடு. அந்தக் கண்கவர் அருங்காட்சியகம் குறித்து காண்போம்.
தென்மேற்கு ஆசியாவில், செங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு அரபு தேசமே ஜோர்டான் ஆகும். செங்கடலில் பவளப்பாறைகளை பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், விரும்பும் நாடுகளில் ஜோர்டானும் ஒன்று. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு தனது நாட்டின் இராணுவ பலத்தை விளக்கும் வகையில் ஒரு புதிய அருங்காட்சியகத்தை ஜோர்டான் அரசு கடந்த புதன் கிழமையன்று திறந்தது.
ஜோர்டானின் தெற்கு துறைமுகமான அகாபாவில் உள்ள செங்கடலில் 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பவளப்பாறைகளில் இடையே பீரங்கிகள், ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், இராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கவச வாகனங்கள் ஆகியவை நீருக்குள் நிறுத்தப்பட்டு உள்ளன. இவை ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு கடலில் இறக்கிவிடப்பட்டவை.
இந்த அருங்காட்சியகத்தை எளிதாகக் கண்டுவிட முடியாது. ஆழ்கடலில் மூழ்கும் உபகரணங்களை வைத்துள்ளவர்கள், ஆழ்கடலில் மூழ்கும் வீரர்கள், முத்துக் குளிப்பவர்கள், கண்ணாடியாலான அடிப்புறம் கொண்ட படகுகளில் செல்பவர்கள் மட்டுமே இதனைக் கண்டு களிக்கலாம்.
இந்தக் கோடைக் காலத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அகாபா சிறப்பு பொருளாதார மண்டலத்தின் ஒரு திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்திற்கென, கைவிடப்பட்ட ராணுவ காட்சிப் பொருள்களை, அந்நாட்டு இராணுவம் இலவசமாக வழங்கி உள்ளது. விரைவில் இங்கு ராணுவ பொருட்களோடு சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளைச் சேர்ந்த பொருட்களும் இணைக்கப்படும் என்று அருங்காட்சியக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பல திரைப்படத் தயாரிப்பாளர்களின் கவனமும் இதை நோக்கித் திரும்பியுள்ளதால், விரைவில் இந்த கடலடி அருங்காட்சியகத்தை நாம் திரையிலும் கூட காணலாம்.
Discussion about this post