அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தல்களில் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றார். யார் இந்த ஜோ பிடன்? அதிபர் தேர்தலில் டிரம்புக்கு இவரால் நெருக்கடி கொடுக்க முடியுமா? என்று தற்போது பார்க்கலாம்…
1942 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்து, டெலேவர் மாகாணத்தில் வளர்ந்தவர் ஜோ பிடன். சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்த இவர் 1969 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகத் தம்மை பதிவு செய்து கொண்டார். ஜனநாயக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டினார். 1972ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைக்கு டெலேவர் மாகாணத்தில் இருந்து இவர் தேர்வானபோது, அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான மிகக் குறைந்த வயதுடைய உறுப்பினர்களில் இவர் 6-வது உறுப்பினர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார். இதனால் அமெரிக்கா முழுவதும் ஜோ பிடன் பரவலாக அறியப்பட்டார்.
இதே டெலேவர் மாகாணத்தில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 6 முறை, இவர் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில் ஜோ பிடன் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது, மேலவையின் மூத்த உறுப்பினராக இருந்தார்.
பின்னர் அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக 2009 ஆம் ஆண்டில் இவர் பொறுப்பேற்றார். ஒபாமாவின் துணை அதிபராக 2017 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இருமுறையும் பணியாற்றினார். ஒபாமாவின் உற்ற நண்பர்களில் ஒருவராக ஜோ பிடன் அறியப்படுகிறார்.
அமெரிக்கக் குடிமகனுக்கான மிக உயரிய விருதான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கத்தை’ கடந்த 2017ஆம் ஆண்டில் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்த விருதை அமெரிக்க அதிபர்களில் கூட 3 பேர் மட்டுமே பெற்றிருந்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில் இவர் போட்டியிடாத நிலையில், இந்த ஆண்டு ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.
அதிபர் பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் தனது சக வேட்பாளரான பென்னி சாண்டர்ஸ்சை விடவும் அதிகமான ஆதரவை தற்போது ஜோ பிடன் பெற்றுள்ளதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிரான வேட்பாளர் பிடன்தான் என்று கருதும் நிலை ஏற்பட்டு உள்ளது.
முன்னதாக ஜோ பிடனின் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிரம்ப், உக்ரைன் அதிபரிடம் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவலின் அடிப்படையில், பதவி நீக்கத் தீர்மானத்தை டிரம்ப் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.