வெளிநாட்டு வேலை மீதான மோகத்தால், அங்கு வேலைக்கு செல்பவர்கள் விற்கப்படுவதாக அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு வேலை என்றாலே, ஒரு தனி மோகம் உள்ளது. அப்படி வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பலர், தங்களுக்கு தெரியாமலேயே விற்கப்படுகின்றனர் என்பதுதான், அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள், பெரும்பாலும் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவே செல்கின்றனர். வீட்டு வேலை, சமையல் வேலை உள்ளிட்ட வேலைகளுக்காக செல்பவர்கள் பலர், தாங்கள் வெளிநாட்டிற்கு சென்றால் போதும் என்ற நோக்கத்தில், முறையான விசா பெறாமல், சுற்றுலா விசாவில் செல்கின்றனர். இது, பின்னாளில் இவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் உணர்வதில்லை.
குறிப்பாக, தனியார் ஏஜென்சி மூலம் வேலைக்கு அனுப்பப்படும் பலருக்கு, தாங்கள் என்ன வேலைக்கு செல்கிறோம், எந்த நிறுவனத்திற்கு செல்கிறோம், செல்லும் நாட்டில் இந்திய தூதரகம் உள்ளதா, வேலை தொடர்பான விசாவில் தான் செல்கிறோமா என்பதை அறிந்து கொள்ளாமல் செல்கின்றனர். இதனால், அங்கு அவர்கள் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு, தாங்கள் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதைக் கூட தங்கள் குடும்பத்திற்கு தெரியப்படுத்த முடியாமல் உள்ளனர். இப்படி, வேலைக்கு அனுப்பப்படும் சிலர் விற்கப்படுகின்றனர் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதற்காக பல ஆன்லைன் ஏஜென்சிக்கள் செயல்படுகின்றன. இவர்கள், இன்ஸ்ட்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி, இந்த மனித விற்பனையை செய்து வருகின்றனர். இதற்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலும் தனி ஆப்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது இது கண்டுபிடிக்கப்பட்டு, மனித விற்பனையானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக குவைத், பெக்ரைன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் தான், மனித விற்பனை அதிக அளவில் நடப்பதாக கூறும் சைபர் குற்றப் பிரிவினர், மனிதர்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இதை தடுப்பது சாத்தியம் என்கின்றனர். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர், தான் செல்லும் நாட்டின் எந்த பகுதிக்கு செல்கிறோம், எந்த விசாவில் செல்கிறோம், நம்மை அனுப்பும் நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா, செல்லும் நாட்டில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்பு தான், வெளிநாட்டு பணிக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
Discussion about this post