இங்கிலாந்தை ஆண்ட விக்டோரியா மகாராணியின் படைகளுக்குத் தண்ணீர் காட்டிய இந்தியாவின் பெண்ணரசி ராணி லட்சுமிபாய் மறைந்த தினம் இன்று. ஜான்சி ராணி என்று மக்களால் அறியப்படும் ராணி லட்சுமிபாயின் வீரம் குறித்து அவர் மறைந்த தினத்தில் நினைவு கூர்வோம்…
1835ல் மணிகர்ணிகா என்ற இயற்பெயரோடு பிறந்த இவர், வட இந்தியாவின் ஜான்சி பகுதியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவரை 1842-ல் திருமணம் செய்ததன் மூலம் ராணி லட்சுமிபாய் என்ற பெயரையும், ஜான்சியின் ராணி என்ற பெருமையையும் பெற்றார்.
1851ல் தனது 16-வது வயதில் இவர் தாமோதர் ராவ் என்ற இளவரசனையும் பெற்றெடுத்தார். ஆனால் இந்த இளவரசன் அடுத்த 4 மாதங்களில் இறக்க, இவர் ஆனந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு தாமோதர் ராவ் என்று தனது குழந்தையின் பெயரையே சூட்டி வளர்த்தார். ஆனால் குழந்தையின் இறப்பை அரசர் கங்காதர ராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவர் 1853ல் மறைந்தார்.
இந்த தொடர் துயரங்கள் ஒருபக்கம் இருக்க, ‘ஒரு அரசர் இறந்துவிட்டால் அவர் பெற்ற மகன் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும், தத்து பிள்ளைகளுக்கு உரிமை இல்லை’ என்று சொன்ன ஆங்கிலேயர்கள், லட்சுமிபாயை பதவி விலகக் கூறினார்கள். ஆனால் அவர் பதவி விலகவில்லை.
இந்நிலையில் 1857ல் முதல் சுதந்திரப்போர் தொடங்கியதால் ஆங்கிலேயர்கள் அதில் கவனம் செலுத்தினர். ஆனால் அவர்களுக்கு லட்சுமிபாய் தொடர்ந்து ஆட்சி செய்வது பிடிக்கவில்லை. இதனால் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளைப் படுகொலை செய்தார்’ என்று அவர்மீது இல்லாத பழியைகூறிய ஆங்கிலேயர்கள் ஜான்சி தேசற்கு எதிராக போரை முன்னெடுத்தனர்.
1858 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ஹீ ரோஸ் என்பவர் தலைமையில் ஆங்கிலப் படை போர் அறிவித்தது. உடனே ஜான்சியின் படைகளுக்கு உதவ வந்த பிற அரசர்கள் மற்றும் புரட்சிக்காரர்களின் படைகளைத் தடுத்த ஆங்கிலேயர்கள், ஜான்சி படைக்குக் கிடைக்க வேண்டிய ஆயுதங்களையும் தாங்கள் பறித்துப் பயன்படுத்தினர்.
உதவி இல்லை, உரிய ஆயுதங்களும் இல்லை, தனக்கு வர வேண்டிய ஆயுதங்கள் எதிரிகளின் கையில் என்ற நிலையிலும் ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்துடன் போராடிய ஜன்சிராணி போரில் தனது கோட்டையை இழந்தாலும், தனது குதிரையில் கைக்குழந்தையோடு கோட்டைச் சுவரைத் தாண்டிக் குதித்து மீண்டு வந்தார்.
பின்னர் இவர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் இனைந்து போரிட்டு குவாலியர் கோட்டையையும் கைப்பற்றினார். ஆங்கிலேயரின் படைகள் குவாலியர் கோட்டையையும் முற்றுகையிட்டு பெரும் போர் செய்ய, 1858 ஜூன் 18 அன்று அங்கிருந்து தப்பிக்கும் போது படுகாயமடைந்த ஜான்சிராணி அதே நாளில் மறைந்தார்.
ஜான்சி ராணியைக் குறித்து எழுதிய ஆங்கிலேய படைத் தளபதி ஹீ ரோஸ், ‘வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர். ஆனால் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர்’ என்று இவரைக் குறிப்பிடுகிறார்.
இந்தியப் பெண்களின் வீரத்திற்கும் மன உறுதிக்கும் என்றும் அடையாளமாகப் போற்றப்படும் ஜான்சி ராணியின் நினைவாக சுபாஷ் சந்திரபோஸ் தனது பெண்கள் படைப் பிரிவுக்கு ஜான்சி அணி என்றே பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குறித்து எண்ணற்ற நூல்கள், நாடகங்கள் வெளிவந்து உள்ளன. சமீபத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் படமாக இந்தியில் வெளியான ‘மணிகர்ணிகா’ பெருவெற்றி பெற்றது என்பது, இன்றும் இந்திய மக்கள் மத்தியில் ஜான்சி ராணிக்கு உள்ள மதிப்பைக் காட்டுகின்றது.
Discussion about this post